விக்ரம் சுகுமாரன்
தமிழ் சினிமாவில் தனது திறமையால் அடையாளம் காணப்பட்ட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக மதுரையில் நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பயணம்
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், விக்ரம் சுகுமாரன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், விக்ரம் சுகுமாரன், புகழ்பெற்ற இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவியாளராக தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பான கதை நேரம் தொடரில் உதவி இயக்குநராகவும், சிறு சிறு வேடங்களில் நடிகராகவும் பணியாற்றினார். பின்னர், பாலுமகேந்திராவிடமிருந்து பிரிந்து, சொந்தமாக படங்கள் இயக்குவதற்கு முயற்சித்தார். இந்தக் காலகட்டத்தில் தான் இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.
Thug Life படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம் இதோ..
குறிப்பாக, ஆடுகளம் படத்தில் மதுரையை மையப்படுத்திய கதைக்களத்திற்கு விக்ரமின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருந்தது. தனுஷின் உடல் மொழி, பேச்சு, மற்றும் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களை வடிவமைப்பதில் விக்ரமின் உழைப்பு முக்கிய பங்கு வகித்தது. இப்படம் தேசிய விருது பெற்றதற்கு அவரது பங்களிப்பும் ஒரு காரணம்.
பின்னர், மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம், நடிகர் வேல ராமமூர்த்தியை அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் நடிகர் கலையரசனுக்கு அவர் டப்பிங் செய்தது பெரும் பாராட்டைப் பெற்றது. மேலும், ராவணக் கூட்டம் படத்தையும் இயக்கினார்.
விக்ரம் சுகுமாரன், தனது படைப்புகளை மட்டுமே பேச வேண்டும் என்று நம்பியவர். தன்னை விளம்பரப்படுத்துவதை விரும்பாத அவர், தனது திறமையால் மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டும் என்று விரும்பினார்.விக்ரம் சுகுமாரன் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி ஒரு சித்த மருத்துவர். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
உடல் நல பாதிப்பு
கடந்த ஒரு வருடத்தில் சவிக்ரமின் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு முறை லேசான பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், மீண்டு வந்தார். ஆனால், தொடர்ந்து மன அழுத்தம் அவரைப் பாதித்து வந்ததாக நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. விக்ரம் சுகுமாரனின் மறைவு, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இழப்பாகும் என்று சுபைர் தெரிவித்துள்ளார்.