சுரேஷ்:
தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகளை வழங்கிய இயக்குனர் சுரேஷ், தனது திரைப்பயணம், படைப்பு முறைகள் மற்றும் அனுபவங்கள் குறித்து பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்து கொண்டார். ‘அரசு’, ‘கம்பீரம்’, ‘சபரி’, ‘நம் நாடு’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்ற இவர், தனது படைப்பு முறைகளையும், உத்வேகங்களையும் விவரித்தார்.
சுரேஷின் திரைப்பயணம் ஒரு உதவி இயக்குனராக தொடங்கியது. “நான் முதலில் இயக்குனர் ராஜவர்மனிடம் கதை விவாதத்திற்காக சென்றேன். அப்போது சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன்,” என்கிறார் சுரேஷ். ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கதை விவாதத்தில் பங்கேற்ற பின் கவுண்டமணி-செந்தில் காமெடி காட்சிகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வாரத்தில் காமெடி காட்சிகளை எழுதி கொடுத்தேன். அது இயக்குனருக்கு பிடித்து, ‘மணிக்குயில்’ படத்தில் எனது முதல் பங்களிப்பாக அமைந்தது.
முதல்படமான ‘அரசு’, சரத்குமார், சிம்ரன், வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முதலில் ஒரு குழந்தையை மையப்படுத்திய கதையை எழுதியிருந்தேன். ஆனால், தயாரிப்பாளர்கள் ஆக்ஷன் கதையை எதிர்பார்த்தனர். அப்படித்தான் ‘அரசு’ கதை உருவானது. இப்படத்தில் தந்தை-மகன் உறவை வித்தியாசமாக சித்தரித்து, வழக்கமான கதாபாத்திரங்களுக்கு மாறாக ஒரு கதையை உருவாக்கினேன்.
சரத்குமார் சாரிடம் கதை சொன்னபோது, அவர் ‘சூரியன்’ படத்தைப் போல ஒரு ஆக்ஷன் படம் எதிர்பார்ப்பதாக கூறினார். நான் ‘இது டபுள் சூரியனாக இருக்கும்’ என்று உறுதியாக சொன்னேன். அவருக்கு கதை பிடித்து, உடனடியாக படத்தை தொடங்கினோம்.
‘அரசு’ படத்தின் காமெடி காட்சிகள், இன்றளவும் மீம்ஸ் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன. எங்கள் வீட்டுக்கு எதிரில் வசித்த பிராமண குடும்பத்தின் பேச்சு மற்றும் நகைச்சுவை பாணியை அப்படியே பயன்படுத்தினேன். ஆனால், வடிவேலுவை இப்படத்தில் நடிக்க வைப்பது சவாலாக இருந்ததது. வடிவேலு சார் முதலில் கதையைக் கேட்காமலேயே ஒப்புக்கொண்டார். ஆனால், படப்பிடிப்பில் காமெடி காட்சிகள் அவருக்கு பிடிக்கவில்லை. டப்பிங்கின்போது படத்தை பார்த்து, காட்சிகளை ரசித்து முழுமையாக ஒத்துழைத்தார்,” என்று சுரேஷ் தெரிவித்தார்.