நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் அவர், “இப்போது அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது ஃபேஷனாகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம் என்று அமித் ஷா கூறியிருந்தார்.
இதற்கு முன்னணி நடிகரும், தவெக கட்சியின் உறுப்பினருமான விஜய், யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்…
அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமின்றி பிரபல இயக்குனர் பா ரஞ்சித், “அவர் நமக்குச் சட்டங்களைக் கொடுத்தார், நமக்குக் கண்ணோட்டத்தைக் கொடுத்தார், நமது இருளை ஒளியாக மாற்றினார்”.
“நாம் அவரது பெயரைப் பெருமையுடன் உச்சரிக்கிறோம்-அவர் நமக்கு கண்ணியத்தைக் கொடுத்தார், நமது வழிகாட்டியாக இருந்தார்:”.
“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” என்று சொல்வோம், அது தான் உங்கள் பாசிச அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறது.
“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” என்று சொல்வோம், அது உங்கள் மனுதர்ம கனவை நிறைவேற்றாமல் தடுக்கப் போகிறது.
நேற்று அத்வானி, இன்று அமித்ஷா. நீங்கள் துடைத்தெறியப்பட்டு வரலாற்றில் தேடினாலும் கிடைக்காத காலத்தில், பாபாசாகேப் தன் தத்துவத்தால் இன்னும் கூட தீர்க்கமாய் நிலைபெற்றிருப்பார். ஆகையால் பாசிஸ்டுகள் சோர்வடைய வேண்டாம்.
அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் நடிகரும், அமைச்சருமான உதயநிதி, “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.



