ஆகாஷ் பாஸ்கரன்
தமிழக அரசியலையும் சினிமா உலகத்தையும் ஒருசேர அதிரவைத்திருக்கும் அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
கடந்த மாதம் டாஸ்மார்க் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் சுமார் ₹1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கண்டறிந்தனர். இந்த அதிரடியின் அடுத்த கட்டமாக இன்று காலை 5.30 மணி முதல் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி, அதர்வா – காயாது லோஹர் நடித்துள்ள இதயம் முரளி, சிம்பு நடிக்கும் 49வது படம் என தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் தான் உதவி இயக்குநராக பயணத்தை தொடங்கிய அவர், மிகக் குறுகிய காலத்தில் இத்தனை பெரிய தயாரிப்புகளுக்கு நிதி ஒதுக்குவது எப்படி என்ற கேள்விகள் திரைத்துறையில் அதிகம் எழுந்தன.
மேலும் சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஆகாஷ் பாஸ்கரன் இல்ல திருமணத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தனர். இந்த நிகழ்ச்சி தான் தற்போது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
ஐடி ரெய்டு
அமலாக்கத்துறை சோதனை எதிரொலி காரணமாக, தற்போது தயாரிப்பில் உள்ள இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்களுக்கு நிதி மற்றும் வெளியீடு தொடர்பான சிக்கல்கள் ஏற்படுமா என்பது குறித்துத் தயாரிப்பு குழுவினர் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
ஆகாஷ் பாஸ்கரன் சினிமாவில் நுழைந்து வெகு சீக்கிரமே பெரிய தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து நிதி வருவாய் , அரசியல் தொடர்புகள் என அனைத்தையும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.